சிலேடை(பாகம் 2)
ஒளவையார் தனது தள்ளாடும் வயோதிகப் பருவத்தில் இருந்த பொது குறிப்பறிந்து திருவாலங்காடு அருகில் இருக்கும் பழயநூரை சேர்ந்த சாரி என்பவன் அவருக்கு கோல் கொடுத்து உதவினான் . அதற்கு கைம்மாறு செய்ய விரும்பிய அவர் ஒரு கறவை ஆடு வாங்கிப் பரிசாக கொடுக்க நினைத்தார் . அதனால் அப்பொழுது ஆட்சியில் இருந்த சேர மன்னனை சந்தித்து நடந்ததைக் கூறி " ஒரு ஆடு வேண்டும் " என்றார் .சேர மன்னனோ ஒரு தங்க ஆட்டையே அவருக்கு பரிசாக அளித்தான் . இதை பாராட்டி பாடிய ஒளவை "சேரா , உன்னாடு பொன்னாடு " என்று வாழ்த்தினார் .இது ஒரு சிலேடை . நேரடியாக அவர் " உன் ஆடு பொன் ஆடு " என்று கூறுவதாகவும் கொள்ளலாம் . அதோடு "உன் நாடு பொன் நாடு " என்று அவர் வாழ்த்தியதும் பொருந்தும்.
-------------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேருக்கு நன்கு தெரிந்த ஒளவை மூதாட்டியின் ஒரு பாடல் .
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலரால் நோக்குண்டாம் மேனிநுடுங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
இப்பாடலுக்கு மேலெழுந்தவாரியான பொருள் :
" யானை முகத்தவனைத் தவறாமல் என்றும் வணங்கி வருபவர்களுக்கு நல்ல வாக்கு , நல்ல மனம் ,இலக்ஷ்மி தேவியின் நல்ல பார்வை ஆகிய இம்மூன்றும் கிட்டும் ."
இப்பாடலில் மறைந்துள்ள மற்றொரு பொருளையும் காண்போம் .நீண்ட நாள் வாழ்தற்க்குரிய அருமருந்தான காயகல்பம் செய்யும் முறையைப் பாட்டி கூறுகிறார்கள் .
1. துப்பார்த்திருமேணி - திரு அடைமொழி . துப்பு - குப்பை .மேனி .இச்செடி எங்கும் வளர்ந்திருக்கும் .
2. தும்பிக்கையான் பாதம் - அனைநெருஞ்சி
3. மாமலர் - தாமரை.
குப்பைமேனி இலை , ஆனைநெருஞ்சி இலை , ஓரிதழ்த் தாமரை இவற்றைச் சம அளவில் எடுத்து பனங்கற்கண்டு , பசுநெய் , தேன் ஆகிய மூன்றுடன் சேர்த்து செய்ய கிடைப்பதே காயகல்பம் . இந்த மருந்தை உண்டால் நல்ல வாக்கு வன்மை பெரும் .நல்ல மனம் உண்டு (உடலில் எந்த இடையூறும் வராது ) நல்ல நோக்கு - நல்ல பார்வை கிட்டும் , மேனி நுடங்காது - உடல் தொய்வு ஏற்படாது .எனவே இரண்டிற்கும் வழி காட்டிய ஒளவையை போற்றி வாழ்வோம் .
-------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ சுவாமிநாத சுவாமியை வணிகச் செட்டியாராக பாவித்து , இரு பொருள்படும்படி பாடல் ஒன்றை இயற்றியுள்ளார் சொக்கநாதப் புலவர் . அது :
" வெங்காயம் சுக்கானால் , வேந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
எரகத்துச் செட்டியாரே "
இதற்கு , " அஜீரணத்தைப் போக்க ரசம் சாப்பிடு , குணம் அடையலாம் " என்றும் , " உடம்பு தளரும் போது நம் ஆன்மாவுக்கு வீடுபேற்றை தரவல்லது ஸ்ரீ ச்வாமினாதறது பேரருள் மட்டுமே " என்றும் இரு வேறு பொருள் கொள்ளலாம் .
[குறிப்பு]
வெங்காயம் -> வெம்மையான காயம்(உடல்)
சுக்கு -> சுக்கு போல் சிரியதாக
வெந்தயம் -> அயக்கந்த சிந்தூரம்
இச்சரக்கை ->இவ்வுடலை
சீரகத்தை -> சீரான மனத்தை
பெருங்காயம் -> பெரிய உடல்
ஏரகத்து செட்டியார் -> திருவேரகம்(சுவாமிமலை) முருகன் .
-------------------------------------------------------------------------------------------------
திருமணம் ஒன்றில் மணமக்களை சிவனும் திருமாலும் காக்க வேண்டும் என்று சிலேடையாக பாடியது .(காளமேகப் புலவர் பாடல் )
" சாரங்க பாணியர் அஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓர்அங்கம் கொய்த உகிர்வாளர் - பார்எங்கும்
எத்திடுமை ஆகர் இனிதால் இவர்உம்மைக்
காத்திடுவர் எப்போதும் காண்" .
1. சாரங்க ->சார்+அங்க(சால்புடை அங்கத்தினர்) , சாரங்கம் எனும் வில் கொண்டவர்.
2.அஞ்சக்கரத்தர் ->ஐந்து அக்கரத்தை(அட்சரம்) உடையோர்(நமசிவாய), அம் (அழகான) சக்கரத்தைக் கொண்டவர்.
3.ஓரங்கம் கொய்த => ஓர் அங்கம் அளித்த (உமையொரு பாங்கன்), ஓரங்கம்(திருவரங்கம்)
மேற்காணும் ஒற்றுமைகளால் சிவனும் திருமாலும் இப்பாவில் ஒன்றாகின்றனர்.
[ ஓம் நம சிவாய , ஓம் நமோ நாராயணாய ]